சிவாயநம, அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி என்னும் தாயுமானவரின் வரிகளுக்கு ஏற்ப இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். இவ்வாறு பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் இறைவனின் மூலம் எது? அறிவியல், பிரபஞ்சத்தின் மூலம்(Origin) நெருப்பு என்று பிக் பேங் தியரி மூலம் சொல்கிறது. நம்முடைய ஆன்மீகமும் இறைவனின் மூலம் (Origin) நெருப்பு என்று திரும்பத் திரும்ப சொல்கிறது. இறைவனின் மூலம் என, மிக கம்பீரமாக எழுந்து நிற்பது நம்முடைய அருணாச்சல மலை. 12 ஜோதிர்லிங்கங்கள் இருக்க ஏன் திருவண்ணாமலை இறைவனின் மூலம் என்று இங்கு சொல்லப்படுகிறது? இறைவனின் மூலம், ஆண் பெண் தன்மை கொண்டது. அதனை நமக்கு உணர்த்தும் வண்ணம் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் அன்று மாலை 6 மணி அளவில் இறைவன் அர்த்தநாரீஸ்வரராக மிகச் சிறிது நேரம் எழுந்தருளுகிறார். இந்த அர்த்தநாரீஸ்வரர்தான் பரப்பிரம்மம். இந்த பரப்பிரம்மத்தை சிவ சக்தி என்றும் அழைக்கலாம். சிவசக்தி என்று அழைக்கப்படும் அர்த்தநாரீஸ்வர ஸ்வரூபமான நெருப்பிலிருந்து அனைத்து உயிர்களும் உருவாகின. சக்தி என்றும் அழைக்கப்படும் பெண் தன்மையிலிருந்துதான் அனைத்து தெய்வங்களும...