செஞ்சி பாணம் பாக்கம் கைலாசநாதர் கோவில், திருப்பணி மூலம் இறைவன் எத்தனை எத்தனை ஆன்மாக்களை மனநிறைவு என்கின்ற ஒரு விஷயத்தை நோக்கி பயணம் செய்யுமாறு திசைதிருப்பி விட்டிருக்கிறார் என்பதை பதிவு செய்ய ஆசைப்பட்டதால் இந்த ஒரு பதிவு.. அவ்வாறு பதிவு செய்யும் முன்னர், ஆன்மா என்பது குறித்து சில விஷயங்களை பேசுவோம், பிறகு கடவுள் எவ்வாறு நமக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறார் நம்முடன் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்பதை பார்ப்போம். மனதில் உணர்ந்த அத்தனை விஷயங்களையும் வார்த்தைகளால் கொண்டுவர முடியுமா என்றால் தெரியவில்லை ஆனால் இங்கே ஒரு முயற்சியை மேற்கொள்ளலாம் என்கின்ற எண்ணத்தில் இந்த பதிவு பதிவிடப்படுகிறது. இந்தப் பதிவு வாட்ஸப்பில் மிகப்பெரிய பதிவாக இருக்கும் என்பதினால் இதனை இணையதளத்தில் பதிவு செய்து அதற்குரிய இணையதள லிங்க் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் அனைத்து விஷயங்களையும் கொடுக்க முடியாது என்பதினால் முடிந்த போதெல்லாம் பதிவு செய்து அதற்குரிய இணையதள லிங்க் குழுவில் பகிர்ந்து கொள்ளப்படும். இந்தப் பதிவின் மூலம் ஏதேனும் ஒரு சில அடியவர்களுக்கு ஆன்மா குறித்த ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது என்றால் அது தான் இந்த பதிவின் நோக்கம். இந்தப் பதிவு சில விஷயங்களை உணர்ந்ததன் அடிப்படையில் மட்டும் பதிவு செய்யப்படுகிறது. இந்தப் பதிவை இன்று எழுத வைத்த இறைவனை வணங்கி நன்றி கூறி இந்த பதிவு குழுவில் பதிவிடப்படுகிறது.
சிவாயநம கடவுள் குறித்து ஒரு குழப்பமான மனநிலை நம் அனைவருக்கும் இருக்கிறது கடவுள் ஒருவருடன் இருக்கிறார் என்று நாம் நம்பினால் அவர்கள் செல்வ செழிப்புடன் இருப்பார்கள், அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்றெல்லாம் ஒரு கருத்து பெரும்பாலும் நமக்குள் இருக்கிறது. அது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். இங்கு எடுத்துக்காட்டாக ஒரு நல்லதொரு குடும்பத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு குடும்பத்தலைவர் வேலை செய்யும் இடத்தில், ஒரு நல்ல பணியில் இருக்கிறார் அவருக்கு வேலைகள் சம்பந்தப்பட்ட பொறுப்புகள் மிக மிக அதிகம். எனவே இதுகுறித்து டென்ஷனும் அதிகம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மனைவி குழந்தைகளுடன் வசிக்கும் பெற்றோர் அனைவரும் அவருக்கு அனுசரணையாக அவருக்கு வேண்டிய அமைதியை அரவணைப்பை கொடுக்கும் பொழுது அவர் தன்னுடைய வேலையை வேலையில் உள்ள பிரச்சனைகளை நல்லபடியாக எதிர்கொண்டு அடுத்த நிலைக்கு செல்ல முடியும். மனைவியோ அல்லது அவரின் பெற்றோர் அல்லது அவருடைய குழந்தைகள் அவருடைய வேலையில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்ய இயலாது. அவருடைய வேலை பார்க்கும் இடத்தில் உள்ள பிரச்சினைகளை அவரால் மட்டும்தான் எதிர்கொள்ள முடியும். அதுபோல் முந்தைய பிறவியில் செய்த நல்வினை தீவினைகளின் பயனாக நம்முடைய பெற்றோர், மனைவி, குழந்தைகள் நாம் வேலை பார்க்கும் இடம், நம்முடைய வசதிகள் அனைத்தும் அமைகின்றன. கடவுள் என்பவர் நாம் இருக்கும் சூழ்நிலையில் எப்படி பிரச்சனைகளை எதிர்கொண்டு சமாளித்து அடுத்தடுத்த நிலைக்கு அதாவது மனதை பக்குவப்படுத்தி நம்மை அழைத்துச் செல்பவராக கடவுள் இருக்கிறார். கடவுள் என்பவர் ஒரு ஒரு மந்திரக் கோலை வைத்து “ஜூ மந்திரகாளி” என்று சொல்லி நம்முடைய பிரச்சனைகளை மாயமாக மறைய வைப்பவர் அல்ல. நமக்கு வசதி வாய்ப்புகள் வேண்டும் என்று ஒரு மந்திரம் சொல்லி வசதி வாய்ப்புகளை கொடுப்பவரும் அல்ல! கடவுள் ஒருவருடன் கூட இருக்கும் பொழுது அவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படாது என்றால் கிருஷ்ணர் பஞ்ச பாண்டவர்களுடன் கூட இருந்தார். பின் ஏன் கௌரவர்கள் மூலம் அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டது. துரியோதனன் கூட இருந்த பீஷ்மர் போன்ற பெரியவர்களுக்கு பாண்டவர்களுடன் கிருஷ்ணர் இருக்கிறார் என்பது தெரியாதா? ஏன் துரியோதனனுக்கு தெரியாதா? என்றாலும்கூட ஏன் மகாபாரத போர் ஏற்பட்டது? மனிதர்களாக பிறந்த அனைவரும் ஆன்மாக்கள். நம்முடைய குடும்பம் பெற்றோர் மனைவி குழந்தைகள் நம்மைச் சுற்றி இருக்கும் நண்பர்கள் அனைவரும் நம்முடைய கர்மாக்களை கழித்து அது இன்பமாக இருந்தாலும் சரி துன்பமாக இருந்தாலும் சரி அதை கழிக்க உதவும் கருவிகள் அதுபோல் நம்முடைய உடலும் நம்முடைய கர்மாவை கழிப்பதற்காக உதவும் ஒரு கருவி. நம்முடைய கர்மாக்களை கழிப்பதற்கு இந்த உலகில் ஒரு உடலெடுத்து வந்திருக்கிறோம் அவ்வாறு உடலெடுத்து ஒரு வாழ்க்கையை வாழும் பொழுது நம்மைச் சுற்றி எவ்வளவுதான் பிரச்சினைகள் இருந்தாலும் மன அமைதியுடன் வாழ்வதற்கு இறைவன் துணையாக இருக்கிறான். கிருஷ்ணர் பாண்டவர்களுடன் துணை இருந்ததுபோல் கடவுள் நமக்குத் துணையாக இருந்து பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்கின்ற வழியை நமக்கு காண்பித்து நம்முடைய மன அமைதியை கொடுக்கிறார் ஆனால் நாம் அனைவரும் பணம் வசதி வாய்ப்புகள் இவற்றை மட்டுமே நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். பணம் மற்றும் வசதி வாய்ப்புகள் என்பது கண்டிப்பாக நம்முடைய வாழ்க்கையை நடத்துவதற்கு தேவை என்றாலும் கூட வெறும் பணம் மற்றும் வசதி வாய்ப்புகள் நமக்கு வேண்டிய மன அமைதியை கொடுத்து விடுமா என்றால் கண்டிப்பாக இல்லை. இவ்வாறு சொல்லும் பொழுது இந்த தத்துவம் எல்லாம் எங்களுக்கு எதற்கு என்று சிலர் நினைக்கலாம். உடல் ஆரோக்கியம் இல்லாத பொழுது தான் அதனுடைய முக்கியத்துவம் நமக்கு புரியும் அதுவும் இந்த வைரஸ் தொற்று காலத்தில் உடல் ஆரோக்கியம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒரு வைரஸ் நம்ம சுவாசிக்க கூட இயலாத அளவிற்கு நம்மை எடுத்துச் செல்கிறது. ஒரு வைரஸ் நம்முடைய உயிரை பறிக்கும் அளவிற்கு செல்கிறது. அந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு விட்டால் அதிலிருந்து காப்பாற்றிக்கொள்ள இப்பொழுது குறைந்தபட்சம் சில லட்சங்கள் தேவை என்பது நம் அனைவருக்கும் தெரிகிறது. நாம் மிகவும் கஷ்டப்பட்டு சேமித்த பணம் எதிர்பாராதவிதமாக ஒரு வைரஸினால் சட்டென கைமாறி மருத்துவமனைக்கு சென்றுவிடுகிறது. பணம் இழப்பு மட்டுமன்றி நமக்கு உடல் மற்றும் மன வேதனைகள் ஏராளம். ஆக நாம் எதிர்பாராத விதத்தில் நாம் சம்பாதித்த பணம் நம்மை விட்டு செல்வதற்கு வாய்ப்புகள் மிக மிக அதிகம். ஆனால் நாம் சம்பாதித்த பணத்தை கொண்டு நாம் செய்த தர்மம் விஷயங்கள் என்றென்றும் நம்மை விட்டு செல்லாது. உயிர் பிரியும் தருவாயில் எந்த ஒரு மனிதனுக்கும் என்ன நினைத்து பார்க்க தோன்றும் என்று இந்த நொடி நாம் நினைத்துப் பார்ப்போம். உயிர் பிரியும் தருவாயில் ஒரு மனிதனுடன் எவ்வளவுதான் ஒருவர் அன்பாக இருந்தாலும் கூட அவருடன் நாம் செல்ல இயலுமா என்றால் கண்டிப்பாக இல்லை. ஒரு மனிதனின் உடலை விட்டு உயிர் பிரியும் பொழுது ஆன்மா வேறு ஒரு உலகத்திற்கு செல்கிறது. உடனே இதை உங்களால் நிரூபிக்க முடியுமா என்று கேட்காதீர்கள். அறிவியல் என்பது எக்ஸ்பிரிமெண்ட் ஆனால் ஆன்மிகம் என்பது எக்ஸ்பீரியன்ஸ். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட எக்ஸ்பீரியன்ஸ் ஐ நம்மால் உணர மட்டும் தான் முடியும். நூறு வருடங்களுக்கு முன்பு ஸ்பானிஷ் வைரஸ் என்றும் ஒன்று வந்தது அப்பொழுதும் பல லட்சக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் இறந்தனர் நூறு வருடங்களுக்கு பிறகு என்று வேறு ஒரு வைரஸ் நம்மை தாக்குகிறது இப்போதும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். அறிவியல் மிக மிக முன்னேறி விட்டது என்று நாம் சொல்கிறோம் ஆனால் 100 வருடங்களுக்கு முன்பு நூறு வருடங்களுக்கு பின்பு என்று இப்பொழுது ஒப்பு நோக்கினால் ஒரு வைரஸினால் இறக்கும் சதவிகிதம் குறைந்து விட்டதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அறிவியல் கண்டிப்பாக நமக்கு தேவை வாழ்க்கையில் பல விஷயங்களை எளிதாக செய்வதற்கு கண்டிப்பாக அறிவியல் உதவி செய்கிறது. ஆனால் அதே அறிவியலால் நம்முடைய உடலை விட்டு மூச்சுக்காற்று நின்றவுடன் என்ன நடக்கிறது நம்முடைய உயிர் அல்லது ஆன்மா எங்கே செல்கிறது? என்பதை அறிவியல் சொல்ல முடியுமா? கண்டிப்பாக இல்லை. நம்முடைய உயிர் என்பது நம்முடைய உடலில் சாஸ்வதமாக எப்பொழுதும் இருக்கும் என்று நம்மால் அறுதியிட்டுச் சொல்ல முடியுமா? எவ்வளவு பெரிய அரசனாக இருந்தாலும் சரி அல்லது ஆண்டியாக இருந்தாலும் சரி ஒருவருடைய ஆயுட்காலம் எவ்வளவு நாள் என்பது யாருக்கும் அறுதியிட்டு சொல்ல இயலாது. ஒருவருக்கு ஆயுட்காலம் இவ்வளவுதான் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது திரும்பவும் ஒரு விஷயத்தை இங்கு வலியுறுத்த விரும்புகிறோம் ஒருவருடைய ஆயுட்காலமும் சரி அவர்களுடைய உடலும் சரி கர்மாக்களை கழிப்பதற்கு என்றே கொடுக்கப்பட்டிருக்கிறது. இது புரியாமல் நம்முடைய உடல் வசதியுடன் வாழ வேண்டும் என்று பல்வேறு வகைகளில் அலைந்து திரிந்து பணம் சேர்க்கிறோம். எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே தேடி தேடி, ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறோம். இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு ஓடுகிறோம் ஆனால் நமது வயதான காலத்திற்கு பின்பு நம் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் பொழுது நாம் வந்த பாதை சரிதானா? என்று தோன்றும் பொழுது மீண்டும் சரியான பாதையில் நடக்க நமக்கு காலம் அனுமதிக்காது.எனவே நம் திறந்து வந்ததின் நோக்கம் என்ன? என்பதை சரியாக புரிந்து கொண்டோம் என்றால் இந்த உலக வாழ்க்கையை எவ்வாறு சரியான முறையில் அனுபவிக்க வேண்டும்? அதே சமயம் நம்முடைய ஆன்மா உடலை விட்டு பிரியும் பொழுது ஆன்மா எந்த விதத்திலும் கஷ்டப்படாமல் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டால், நம்முடைய வாழ்க்கையை ஒரு நடுநிலையான தன்மையோடு வாழ்ந்து அனுபவித்து, அதேசமயம் அடுத்து வரும் பிறவியிலும் நல்லபடியாக நம்முடைய ஆன்மா வாழ்வதற்கு நம்மால் வகை செய்துகொள்ள முடியும். நாம் வாழும் பொழுது திருமணத்திற்கு, குழந்தைகள் படிப்பிற்கு, வயதானால் முதிய பருவத்திற்கு என்று யோசித்து பல செயல்கள் செய்வதைப்போல ஆன்மா ஒன்று என்று இருக்கிறது நம்முடைய உடலை விட்டு உயிர் பிரியும் பொழுது ஆன்மா என்கின்ற ஒன்று வேறு உலகத்தில் கஷ்டப்பட நேரிடும் என்பதை மனப்பூர்வமாக நம்பி, தர்மத்தின் வழியில் நடக்கும் பொழுது கடவுள் நம்முடன் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறார் என்பதை ஒவ்வொரு நொடியிலும் நம்மால் உணர முடியும். அந்த இறைசக்தி நமக்கு வழிகாட்டி கொண்டிருக்கிறது என்பதையும் நம்மால் உணர முடியும். பெரும்பாலும் நம்மில் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை விட நாம் உயர்ந்தவர்கள் என்று காட்டிக்கொள்ள முயற்சிக்கிறோம். வசதி வாய்ப்புகளில் என்றாலும் சரி, அறிவில் என்றாலும் சரி மற்றவர்களுடன் பேசும் பொழுதும் சரி “தான் உயர்ந்தவன்” என்கின்ற ஒரு விஷயத்திற்கு மதிப்பு கொடுத்து அதை மற்றவரும் உணர வேண்டும் என்பதற்கு நம்முடைய பெரும்பாலான நேரத்தை செலவழிக்கிறோம் என்பதுதான் உண்மை. நம்முடைய எண்ணங்கள் எல்லாம் நம்முடைய ஸ்டேட்டஸ் மற்றவர்களை விட உயர்ந்தது என்பதை எவ்வாறு மற்றவர்க்கு உணர்த்துவது என்பதில்தான் இருக்கிறது. நம்மில் எத்தனையோ பேர் தினமும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஸ்டேட்டஸ் என்று அதை மற்றவருக்கு காண்பிக்க நம்முடைய நேரத்தை செலவழித்து கொண்டிருக்கிறோம். நம்முடைய நேரம் என்பது 24 மணி நேரம்தான். இதை ஒரு எடுத்துக்காட்டுடன் சொல்ல வேண்டுமென்றால் மின்சாரத்தை எடுத்துக் கொள்வோம். மின்சாரம் என்பது ஒன்றுதான் ஆனால் குளிர்சாதன பெட்டியில் மின்சாரம் உபயோகிக்கப்படும் பொழுது குளிர்ச்சியாக மாறுகிறது.பல்ஃப் போன்றவற்றில் போன்றவற்றில் மின்சாரம் உபயோகிக்கப்படும் பொழுது வெளிச்சமாக மாறுகிறது. மற்றுமொரு உபகரணத்தின் சுற்றும் சக்தியாக மாறுகிறது. ஆக மின்சாரம் என்பது உபயோகப்படுத்துவதை பொறுத்து, அது எந்த கருவியில் செல்கிறது என்பதைப் பொறுத்து அதனுடைய உபயோகம் மாறுபடுகிறது. எந்தக் கருவியில் மின்சாரத்தை உபயோகித்தாலும் அது முழுமையாக உபயோகிக்கப்படுகிறதா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு குண்டு பல்ஃப் போன்றவற்றை நாம் உபயோகப்படுத்தும் பொழுது வெறும் 25 சதவீதம் மட்டுமே வெளிச்சமாக மாறியது 75% மின்சாரம் வெப்பமாக மாறி வீணாகியது. இப்பொழுதும் கூட ஒவ்வொரு வீட்டு உபயோக பொருளுக்கும் எனர்ஜி ரேட்டிங் என்பது உண்டு. அந்த எனர்ஜி ரேட்டிங், மின்சாரம் எவ்வளவு தூரம் வீணாகிறது? என்பதை பொறுத்து அந்த உபயோக சாதனத்திற்கு எனர்ஜி ரேட்டிங் கொடுக்கப்படுகிறது. எல்இடி பல்ப் வந்த பிறகு மின்சாரம் சேமிக்கப்படுகிறது என்பதை நாம் அறிவோம். ஏனெனில் எல்இடி பல்ப் மிக எளிதாக வெப்பம் அடையாது. அதனால் எல்இடி பல்ப் விற்கு நீண்ட ஆயுள் உண்டு. அதுபோல நம்முடைய நேரத்தை நாம் எவ்வாறு செலவழிக்கிறோம் என்பதைப் பொறுத்து நம்முடைய மனம் வலிமை, மற்றும் உடல் ஆயுள்காலம் பாதுகாக்கப்படுகிறது. சரி இப்பொழுது மீண்டும் நம்முடைய உடல் ஆன்மா மற்றும் கடவுள் இவற்றிற்கு வருவோம். நம்முடைய உடல் சார்ந்த தேவைகள் வசதி வாய்ப்புகள் கண்டிப்பாக நமக்கு ஒரு அளவிற்கு தேவை ஆனால் மற்றவர்களுடன் ஒப்பிட்டு அவர்களைவிட வசதி வாய்ப்பில் நாம் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் பெரிய வீடு கார் போன்றவை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது ஒரு படி மேலே இருக்க வேண்டும் என்று நினைப்பதுதான் தவறு. வியாபார நிறுவனங்கள் தங்களுடைய வியாபாரத்திற்காக பிராண்ட் நேம் என்று ஒன்றைக் கொடுத்து அந்த ஒரு பிராண்ட்க்காக மிக அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பிராண்ட் பொருள் நாம் உபயோகித்தால் உடனே நாம் பெருமை கொள்கிறோம். குழந்தைப்பருவம் முதல் கொண்டு தற்பொழுது பிராண்ட் நேம் குறித்து அதிகமாக யோசிக்கின்றனர் அதற்காகவே தங்களுடைய பொருளை நேரத்தை செலவழித்து அந்த பிராண்ட் நேம் பொருளை உபயோகிக்கும் பொழுது ஒரு தற்பெருமை கொள்கின்றனர். எவ்வளவு தான் மிக உயர்ந்த ஆடை என்றாலும் தூங்கும் பொழுது அந்த ஆடையுடன் நம்மால் தூங்க இயலுமா அவ்வாறு தூங்கினால் நமக்கு வசதியாக இருக்குமா என்றால் இல்லை தூங்கும்பொழுது காற்று உள்ளே செல்லும் வகையில் தளர்வான எளிய பருத்தியினால் ஆன துணி தான் உடலுக்கு உகந்ததாக இருக்கிறது.எவ்வளவுதான் மிகப்பெரிய சொகுசான வசதியான காராக இருந்தாலும் சரி அது வீட்டிற்கு வெளியே தான் நிற்க வேண்டும் கார் என்பது நம் வீட்டிற்குள் வர இயலாது. எனவே எவ்வளவு சொகுசாக தற்பெருமை உடன் நாம் வாழ்ந்தாலும் கூட நம் உடலை விட்டு உயிர் போகும் பொழுது இந்த உடல் நம்முடன் வரப்போவதில்லை அது எரிந்து சாம்பலாகும் அல்லது மண்ணுக்குள் செல்லும். பரவாயில்லை நான் இறக்கும் வரையில் சந்தோஷமாக வாழ்ந்து விட்டு செல்கிறேன் என்று சொல்பவர்கள் நிறைய பேர் ஆனால் இறந்த பிறகு நம்முடைய உடல் நம்மை விட்டு நீங்குகிறது ஆனால் ஆன்மா அதற்குப் பிறகு ஒரு பயணத்தை தொடங்குகிறது. ஆன்மா இல்லை என்று ஒருவர் நினைத்தால் பிறகு ஏன் நாம் அனைவரும் பித்ருக்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்கிறோம் பித்ருக்களுக்கு செய்யாவிட்டால் பித்ருதோஷம் வந்து விடும் என்று பயந்து பல விஷயங்களை செய்கிறோம். இந்தப் பதிவைப் படிக்கும் அடியவர்கள் பித்ருக்களுக்கு செய்கிறார்கள் என்றால் ஆன்மா என்று ஒன்று இருக்கிறது என்ற உணர்வில் மட்டும் தான் அவர்கள் செய்கிறார்கள். அப்படி என்றால் நம்மை விட்டு நம் உயிர் பிரியும் பொழுது நம்முடைய ஆன்மா சிலபல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என்பதை கண்டிப்பாக உணர வேண்டும். ஆன்மா ஒன்று இருக்கிறது, நம்முடைய உடலுக்கு பின்பு ஆன்மாவிற்கு ஒரு நெடும்பயணம் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொண்டால், வெறும் வசதி வாய்ப்புகளுக்கு மட்டுமோ அல்லது தற்பெருமைக்காக பல விஷயங்களை செய்வதோ அனைத்தும் மாறும். ஆன்மா என்று ஒன்று இருக்கிறது இது சத்தியம் சத்தியம் சத்தியம் என்பதை புரிந்து கொள்ளும் நேரத்தில் நம்முடைய செயல்கள் நம்முடைய நேரத்தை நாம் எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்கிறார் அனைத்தும் மாறும். நாம் வாழும் பொழுது நம் ஆன்மாவிற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை திருமூலர் மிக அழகாக “யாவர்க்குமாம்” என்கிற பாடலில் சொல்லியிருக்கிறார்.அறிவியல் வேண்டும் என்றால் மீண்டும் மீண்டும் மாறிக் கொண்டே இருக்கலாம். நேற்றைய ஆராய்ச்சி தவறு, என்று புது ஆராய்ச்சி வந்து இருக்கிறது என்று சொல்லலாம் ஆனால் திருமூலர் எழுதிய பாடல்கள், திருவாசகம் இன்னும் மற்ற திருமுறைகள் சொல்வது அனைத்தும் என்றும் மாறாது. ஏனெனில் அந்தப் பாடல்களில் கொடுக்கப்பட்ட விஷயங்கள் அனைத்தும் சத்தியமானவை சத்தியம் நேரத்திற்கு ஒருமுறை மாறாது. எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு விஷயங்களும் ஆன்மாவின் பாதுகாப்பிற்கு என சொல்லப்பட்ட விஷயங்கள்.
யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே (திருமூலர்)
தினமும் இறைவனை ஒரு நொடியேனும் நினைத்து இறைவனுக்கு அன்புடன் ஒரு இலை தினமும் ஏதேனும் ஒரு உயிருக்கு ஒரு கைப்பிடி உணவு. இதனால்தான் அந்த காலத்தில் அரிசி மாவில் கோலம் போட்டார்கள். அவ்வாறு அரிசிமாவில் கோலம் போடும் பொழுது எறும்புகள் உண்பதினால் நம்முடைய ஆன்மாவை பாதுகாக்கும் ஒரு கவசமாக அது இருந்தது. தினமும் பசுவிற்கு ஒரு கைப்பிடி உணவு மற்றும் நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் இன் முகமாக பேசவேண்டும் என்று சொல்லப்பட்டது. எல்லோரிடமும் இன் முகமாக பேசினால், இந்த காலத்தில் நம்மை ஏமாற்றி விட்டு சென்று விடுவார்கள் என்கின்ற ஒரு கருத்து நிலவுகிறது. இன் முகமாக பேச வேண்டும் என்று சொல்லும்பொழுது மற்றவர்களை வேண்டுமென்றே புண்படும் மணம் பேசுதல் கூடாது. மற்றவர்கள் மனதை காயப்படுத்த வேண்டும் மற்றவர்களை “இறக்கி" பேச வேண்டும் என்று பேசுபவர்கள் எத்தனை எத்தனை பேர்? எப்படி மற்றவர்களை இறக்கி பேசவேண்டும் என்று யோசித்துக் தன்னுடைய காலத்தை அதற்காக வீணாக்குபவர்கள் எத்தனை பேர்?
நாம் எவ்வளவுதான் நம் உடலை அலங்கரித்து மற்றவர் முன்பு தான் அழகாக இருக்கிறேன், மிக அழகாக மற்றவர்களைவிட உடை அணிந்து ஒரு படி அவர்களை விட்டு மேலே இருக்கிறேன் என்று வெளியில் நாம் காட்டிக் கொண்டாலும் கூட ஏற்கனவே சொன்னது போல் நாம் தூங்கும் பொழுது அவ்வாறு தூங்க முடியுமா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. மற்றவர்களுக்காக மற்றவர்களுக்காக என்று போலியாக ஒரு விஷயத்தை செய்கிறோம் மற்றவர்கள் இல்லாத பொழுது நாம் செய்த அந்த விஷயம் நமக்கு ஒரு திருப்தியை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறதா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும் மது குடிப்பவர்கள் மது குடிக்கும் நேரம் சந்தோஷமாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள் . அதுபோன்று மற்றவர்கள் இருக்கும் நேரத்தில் நாம் செய்யும் செயல்கள் பேசும் விதம் அனைத்தும் மற்றவர்கள் முன்னிலையில் ஒரு திருப்தி தருவதாக இருக்கிறது என்றாலும் கூட அந்த திருப்தி முழுவதுமாக நிலைக்குமா என்றால் இல்லை.
பிறகு எதுதான் நிலைத்து நிற்கக் கூடியது? என்கின்ற கேள்வி நம் அனைவருக்குள்ளும் எழுகிறது. ஆன்மா ஒன்றுதான் அழிவில்லாதது. ஆன்மாவின் நாம் எண்ணும் எண்ணங்கள், நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகிக் கொண்டிருப்பது போல், பதிவாகிக் கொண்டிருக்கிறது. ஆன்மா தான் அனைத்தும் என்பதை உணரும் பொழுது இந்தப் பிறவியில் நாம் எடுத்திருக்கும் உடல் கொண்டு எவ்வாறு வாழ்க்கையை வாழவேண்டும் என்கின்ற ஒரு நெறிமுறை நமக்குள் வரும் அவ்வாறு வரும் பொழுது நம்முடைய காலம் நம்முடைய இவ்வுலக வாழ்க்கைக்கு நம்முடைய ஆன்மா வாழ்க்கைக்கும் சரியான விதத்தில் பயன்படுத்தப்படும்.
ஆன்மா தான் அனைத்தும் என்பதை இறைவன் எப்படி உணர்த்தி வழி காட்டிக் கொண்டிருக்கிறார் என்பதை முடிந்த போதெல்லாம் இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்படும்.
அடுத்த பதிவை, இறைவன் எழுத வைக்கும் வரை படித்த விஷயங்கள் குறித்து ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களுடன் யோசித்துப் பார்க்கும் பொழுது ஏதோ ஒன்றை இந்த பதிவின் மூலம் இறைவன் உணர்த்துகிறார் என்பது புரியும்.
Comments
Post a Comment